×

“உலகில் உள்ள எந்த நகரங்களாலும் இந்தளவு அதிக மழையை தாங்க முடியாது” – தென்மாவட்ட மழை, வெள்ள பாதிப்பு குறித்து தலைமைச் செயலாளர் பேட்டி

சென்னை: உலகில் உள்ள எந்த நகரங்களாலும் இந்தளவு அதிக மழையை தாங்க முடியாது என தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளார். தென்மாவட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து சென்னையில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்., அப்போது; தென் மாவட்டங்களில் தற்போது மழையின் அளவு குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது, அதனால் வெள்ளம் ஏற்பட்டது.

கடந்த 30 மணிநேரத்தில் காயல்பட்டினம் பகுதியில் 116 செமீ மழை பதிவாகியுள்ளது. நேற்று 6 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 11 செ.மீ., நெல்லை மாவட்டத்தில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நேற்றும் திருச்செந்தூரில் 23 செ.மீ., காயல்பட்டினத்தில் 21 செ.மீ. மழை பொழிந்துள்ளது. தூத்துக்குடி கடலோர கிராமங்கள், தாமிரபரணி ஆற்றின் கரையோர கிராமங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க 1350 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 16,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டத்திற்கு படகு மூலம் செல்ல முடியவில்லை. அதனால், 9 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மின் விநியோகம் செய்தால் மின்சார பாதிப்புகள் ஏற்படும் என்பதால் மின் தடை செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் வடியும்போது படிப்படியாக மின் விநியோகம் செய்யப்படும். மீட்புப் பணிகளில் 1,350பேர் ஈடுபட்டுள்ளனர்; 160 நிவாரண முகாம்களில் 16,680 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 30,000 லிட்டர் பால் விநியோகிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் மின்விநியோகம் சீரடையவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 60% இடங்களில் மின் விநியோகம் வழங்கப்படவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் 12 சதவீதம் இடங்களில் மின்விநியோகம் இல்லை. தூத்துக்குடி, நெல்லையில் முழுமையாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மின்மாற்றிகள், மின்கம்பங்கள் பழுதாகியுள்ளதால் உடனடியாக மின்சாரம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மின்சாரம் வழங்கினால் வெள்ளத்தால் ஆபத்து ஏற்படக்கூடும்.

கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் 100 சதவீதம் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. 48 மின்மாற்றி மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தேசிய மீட்புபடையினர் போதுமான அளவிற்கு உள்ளனர். 323 படகுகள் கூடுதலாக செயல்படுத்தியுள்ளோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 323 படகுகள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லையில் 64,900 லிட்டர் பால் விநியோகம்; தூத்துக்குடியில் 30 ஆயிரம் லிட்டர் பால் வழங்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு நாட்களில் பால் விநியோகம் சீரடையும். திருச்செந்தூரில் இன்று காலை அதிகனமழை பதிவானது.

ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் படகு மூலமாக கூட செல்ல முடியவில்லை. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் ஹெலிகாப்டர் மூலம் 2 முறை உணவு விநியோகம் செய்யப்பட்டது. விமானப்படை, கடற்படையினர் மூலம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு. தென்மாவட்டங்களில் ஒரு சில இடத்தில் மட்டுமே அதிகனமழை பெய்யும் என தெரிவித்திருந்தது. தென்மாவட்ட பெருமழை பாதிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம் வடிந்ததும் சேதம் கணக்கிடப்பட்டு நிவாரணம் வழங்கப்படும். இதுபோல வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பெய்யும் போது எந்த நடவடிக்கையும் பலனளிக்காது. மீட்பு பணிக்கு செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு என்பது தவறான தகவல். மீட்பு பணியில் 9 ஹெலிகாப்டர்கள் உள்ள நிலையில் மேலும் ஒரு ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்படும். இந்த அளவுக்கு அதீத கனமழை பெய்தால் உலகில் எந்த நகரமும் இதனை எதிர்கொள்ள முடியாது இவ்வாறு கூறினார்.

The post “உலகில் உள்ள எந்த நகரங்களாலும் இந்தளவு அதிக மழையை தாங்க முடியாது” – தென்மாவட்ட மழை, வெள்ள பாதிப்பு குறித்து தலைமைச் செயலாளர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Southern District ,Chennai ,Siv Das ,Dinakaran ,
× RELATED தடையின்றி மின்சாரம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை